திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
Published on

குடவாசல்:

சேஷபுரீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தென்காளகஸ்தி என அழைக்கப்படும் இந்த கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலங்களில் 59-வது தலமாக விளங்குகிறது. முற்காலத்தில் ஆதிசேஷன் தனது சாபத்தை போக்கிக்கொள்ள இறைவனை வேண்டினார்.

அப்போது இறைவன் மகா சிவராத்திரியன்று 3-வது காலத்தில் நடைபெறும் பூஜையில் இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் அடைவாய் என வரம் அளித்த இடம் திருப்பாம்புரம் என வரலாறு கூறுகிறது. இதைப்போல ராகுவும் -கேதுவும் ஏக சரீரமாக இருந்து இத்தல இறைவனை இதயத்தில் வைத்துபூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது.

ராகு-கேது பெயர்ச்சி விழா

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி மதியம் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இதனையொட்டி ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வாழிபாடுகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர். பஸ் மார்க்கமாக இந்த கோவிலுக்கு செல்ல கும்பகோணத்திலிருந்து கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் பஸ் மார்க்கத்தில் கற்கத்தி பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மயிலாடுதுறை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பேரளத்தில் இறங்கி மினி பஸ்சில் கோவிலை அடையலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com