திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நில அளவை தூணில் தீபம் ஏற்ற உத்தரவு: எஸ்டிபிஐ கட்சி கவலை

தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ள அந்த தூண், 'நில அளவை தூண்' தான் எனத் தமிழக அரசு ஆதாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நில அளவை தூணில் தீபம் ஏற்ற உத்தரவு: எஸ்டிபிஐ கட்சி கவலை
எஸ்டிபிஐ கட்சி
Published on: 

சென்னை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து எஸ்டிபிஐ கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பு தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

அவமதிப்பு வழக்கு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாளை மாலை தீபம் ஏற்றவும், மலை முழுவதையும் மத்திய பாதுகாப்பு படையின் (CRPF) கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், கோவில் அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த சட்ட மற்றும் சமூக ரீதியான கவலைகளை பதிவு செய்கிறது.

வேதனை

மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள், மக்களின் மத உரிமைகள் மற்றும் மாநிலத்தின் உரிமைகள் என பல்வேறு அடிப்படை கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்திருப்பது வேதனையளிக்கிறது. மதச்சார்பின்மை என்பது வெறும் அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றிருக்கும் ஒரு சொல்லல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் மத உரிமையையும் சமத்துவத்தையும் பாதுகாக்கும் உயிரோட்டமான அடிப்படை கோட்பாடாகும்.

வழிபாட்டு மரபுகள்

தமிழகத்தில் காலங்காலமாக மத நல்லிணக்கமும், சமூக அமைதியும் போற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நல்லிணக்க மரபையும், மக்களின் மத உரிமைகளையும் மதித்து அணுக வேண்டிய ஒரு விவகாரத்தில், நூற்றாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளுக்கு மாறாக, தனிநபர் ஒருவரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, தமிழகத்தின் மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் சவாலாக மாறிவிடுமோ என்கிற பலத்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு

குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலைத்தூணில் ஒவ்வொரு பக்தரும் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சுப்ரீம் கோர்ட்டும் நீக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த இடம் தர்கா பகுதிக்கு மிக அருகில் உள்ளது மட்டுமின்றி, அந்த இடம் தர்காவுக்கு உட்பட்டது என தர்கா தரப்பு கூறிவரும் நிலையில், அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கையும் பொது அமைதியையும் பாதுகாக்கவே தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை முன்னர் விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் என்ற போர்வையில் மதவாத சக்திகள் அங்கு அதிகளவில் கூடிப் பதற்றத்தை உருவாக்கும் அபாயம் ஏற்படலாம் என்கிற கவலை எழுந்துள்ளது.

நில அளவை தூண்

தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ள அந்த தூண், 'நில அளவை தூண்' தான் எனத் தமிழக அரசு ஆதாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இடத்தின் உரிமை தொடர்பான மூல வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பே 'தீபம் ஏற்ற வேண்டும்' என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, மூல வழக்கின் அடிப்படை தன்மையையே பாதிக்கும் சூழலை உருவாக்கக்கூடும். மேலும், இத்தகைய இடைக்கால நடவடிக்கைகள் 'வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின்' அடிப்படை நோக்கத்திற்கு முரணாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

புதிய கோரிக்கைகள்

அத்துடன், உரிமை குறித்த இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக வழங்கப்படும் இத்தகைய இடைக்கால உத்தரவுகள், எதிர்காலத்தில் தமிழகத்தின் பிற வழிபாட்டு தலங்கள் தொடர்பாகவும் இதே போன்ற புதிய கோரிக்கைகள் எழுவதற்கு ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும் என்ற அச்சத்தையும் எஸ்டிபிஐ கட்சி வெளிப்படுத்துகிறது.

கூட்டாட்சி தத்துவம்

ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு கடமை மாநில அரசிற்கு உள்ளது. அந்த வகையில், தமிழக அரசின் கள யதார்த்த நிலைப்பாடுகளையும், மாநில உரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல், அரசு விதித்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்குவதும், கோவில் நிர்வாகத்தை கலைப்பதும், மத்திய படையை குவிப்பதும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதோடு அது பாரதூரமான விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.

மதச்சார்பற்ற ஜனநாயக நாடு

மக்களின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மாநில அரசின் கைகளை இதுபோன்ற உத்தரவுகள் கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளன. மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பின் உச்சபட்ச அமைப்புகள் வழங்கும் தீர்ப்புகள், அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற மாண்புகளை முழுமையாக பிரதிபலிப்பதாகவும், சமூகத்தில் தேவையற்ற பதற்றங்களுக்கும் பிளவுகளுக்கும் வழிவகுக்காத வகையிலும் அமைய வேண்டும் என்பதே ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அரசியலமைப்பின் அடிப்படை மாண்புகள் பாதுகாக்கப்படும் போதுதான், இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற பெருமையை உலகிற்கு பறைசாற்ற முடியும்.

மறுபரிசீலனை

ஆகவே, இத்தகைய இடைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து, மூல வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரலாற்று மற்றும் வருவாய் துறை ஆவணங்களை முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, அரசியலமைப்பு மாண்புகளும், நீதியும், சமூக அமைதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X