திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருப்பத்தூரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15.8.2019 அன்று சுதந்திர தின விழா உரையில், பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 36-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் 27,376 சதுர மீட்டர் பரப்பளவில், 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 7 தளங்களுடன் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டப்பட இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கருவூலம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர்-கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com