

திருப்பத்தூர்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திருமாறனை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் தேவை என்ற கொள்கையோடு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாறனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
திருப்பத்தூர் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வக்கற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார் கே.ஆர்.பெரியகருப்பன். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க திமுக அரசும் அமைச்சர் பெரியகருப்பனும் என்ன செய்தார்கள்?
எனினும், நமது மத்திய பாஜக அரசு சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். ஆனால், அதையும் தடுத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். அதற்கு காரணம், கே.ஆர்.பெரியகருப்பனின் மனைவி பெயரில் கிரிஷ் ஆக்வா எனும் தண்ணீர் கம்பெனி வைத்திருப்பது தான். தனது குடும்பத்தின் நிறுவனம் வளரவேண்டும் என்பதற்காக, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் திட்டத்தை முடக்கியுள்ளனர். இப்படி சுயநலமிக்க மோசமான திமுக கும்பலிடம் இருந்து திருப்பத்தூர் தொகுதியை நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்தியாவிலேயே ரெயில் பாதை இல்லாத ஒரே சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் தான். இத்தனை ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் கே.ஆர்.பெரியகருப்பன் அதற்காக ஒருமுறையாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா? ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? நான் திருப்பத்தூர் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது வெற்றி வேட்பாளர் கே.சி. திருமாறன் வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றி விழாவில் நமது மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவே நேரடியாக வருவார். திருப்பத்தூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வளர்ச்சியடைந்த திருப்பத்தூர் தொகுதி உருவாகும்.
அதை நடத்திக்காட்ட வேண்டும் என்றால், திருப்பத்தூர் மக்கள் அனைவரும் ஒருசேர நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமாறனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! திருப்பத்தூர் தொகுதிக்கு வளர்ச்சி கிடைக்கட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.