

சென்னை,
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய்-யிடம் கவர்னர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய தவெக அரசும், கடந்த திமுக அரசின் நிலைப்பாடான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அந்த வகையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கார்த்திகை தீபத்திருநாளான (நவம்பர் 24) நேற்று ஒருநாள் மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், கடந்த திமுக அரசு போலவே தற்போதைய தவெக அரசும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என தவெக அரசை குற்றஞ்சாட்டி முருக பக்தர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்புகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி முதல்-அமைச்சர் விஜய்-யிடம் கவர்னர் அர்லேகர் கேட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்படவில்லையென்றால் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு முதல்-அமைச்சர் விஜய்-யிடம் கவர்னர் அர்லேகர் கோரியுள்ளார்.