

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதுறை கிராமம், அரண்மனைக்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) சம்பந்தப்பட்ட தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதுவலசு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 55) மற்றும் காங்கேயம் மருதுறை பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது 41) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 45 முதல் 65 லிட்டர் வரையிலான சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய சமையல் எரிவாயு சிலிண்டர், இரும்பு அடுப்பு, பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தை வெளியில் கடத்திச் சென்று விற்பனை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய ஒரு மின்சார ஸ்கூட்டர் மற்றும் அவர்களிடமிருந்த 3 மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த சட்டவிரோத கும்பலுக்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.