50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு தமிழக ஏற்றுமதியாளர்கள், மக்களுக்கு கடும் அடியாக அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் பின்னலாடை மையம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார உயிர்நாடிகளில் ஒன்றாகும் என்பது உங்களுக்குத் தெரியும். இது தமிழ்நாட்டின் மக்களுக்கு மட்டுமல்ல, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60 சதவீத பங்களிக்கிறது. இதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது. இருப்பினும், பருத்தி நூல் விலையில் நிலையற்ற தன்மை மற்றும் அதிக உற்பத்தி செலவு காரணமாக இந்தத் தொழில் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. அமெரிக்கா சமீபத்தில் 25 சதவீத வரியை விதித்தது, அதைத் தொடர்ந்து 50 சதவீதமாக உயர்த்தியது, தமிழக ஏற்றுமதியாளர்கள் மற்றும் மக்களுக்கு கடும் அடியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவை தாண்டி ஏற்றுமதி இடங்களை பல்வகைப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தச் சூழலில், மத்திய அரசு பின்வருபவற்றை பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்:

இழப்பீடுகள் மற்றும் சலுகைகள்:

கடுமையான வரி உயர்வால் ஏற்படும் திடீர் போட்டித்தன்மை இழப்பை ஈடுசெய்ய இழப்பீடுகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத்தொகைகள் வடிவில் நிதி நிவாரணம் வழங்குதல்.

பருத்தி நூல் மீதான வரி குறைப்பு:

உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் நிவாரணம் அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் இந்திய பின்னலாடை சர்வதேச சந்தைகளில் போட்டித்தன்மையுடன் இருக்க உதவுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கணிசமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளுடன் மற்ற சாத்தியமான நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதியை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com