

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, அவினாசி தெக்கலூர் அருகே காமநாயக்கன்பாளையம் கிராமப்பகுதிக்குள் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை கண்ட நாய்கள் விரட்டி கடித்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்து படுகாயமடைந்த மானை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த மானை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது 3 வயதுடைய ஆண் புள்ளிமான் என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இதேபோன்று நேற்று முன்தினமும் நாய்கள் கடித்ததில் 2 மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.