திருத்தணி கோ.அரியின் கட்சி பதவி பறிப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி

சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அதிமுகவில் வெடித்துள்ளது.
திருத்தணி கோ.அரியின் கட்சி பதவி பறிப்பு: எடப்பாடி பழனிசாமி அதிரடி
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதல் வெடித்தது. இதையடுத்து நடந்த சம்பவங்களால் அக்கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அணி முன்வந்தது. இதை அவர்கள் பகிரங்கமாக தெரிவித்தனர்.

சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதோடு புதிதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

இந்த நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.வான திருத்தணி கோ.அரியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பிலும் இருந்த திருத்தணி கோ.அரி, எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைபோல கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் மாநகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் (கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com