திருவள்ளூர்: கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபாடி கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள் 2 பேர் வீட்டின் அருகே நின்ற டிராக்டரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
திருவள்ளூர்: கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் பலி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 40), விவசாயி. இவருடைய மகன் ரானேஷ் (வயது 6) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு தேர்வாகி 2-ம் வகுப்பு செல்ல இருந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ரானேஷ் வீட்டில் இருந்து வந்தான்.

நேற்று மாலை ரானேஷ் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் டிராக்டரில் தனது மாமா மகன் யாஸ்வினுடன்( 5) விளையாடி கொண்டிருந்தான். அப்போது ரானேஷ் மோட்டார் சைக்கிளின் சாவியை டிராக்டரில் வைத்து விளையாடி கொண்டிருந்தான். திடீரென டிராக்டர் இயங்கி பின்னோக்கி சென்று பாழடைந்த கிணற்றில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த பொது மக்கள் கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த யாஸ்வினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் யாஸ்வின் அளித்த தகவலின்பேரில் கிணற்றில் டிராக்டருடன் ரானேஷ் மூழ்கியது. பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு தெரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றில் கவிழ்ந்த டிராக்டரை வெளியில் எடுத்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி சிறுவன் ரானேசின் உடலை மீட்டனர்.

விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாழடைந்த கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் இறந்த சம்பவம் காஞ்சிபாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com