

திருவண்ணாமலை,
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியிடம் அதேபகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் மாணவியை மிரட்டி அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு மாணவியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் மாணவியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் நேரடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்பட்டு கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. 15 வயது சிறுமி மீதான இந்த கொடூரமான தாக்குதல், இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியது.
இது போன்ற ஈவிரக்கமற்ற கும்பலுக்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் பெரும் மீறலாகும். இந்த மிருகத்தனமான செயலை ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி கடுமையான சட்ட நடவடிக்கையும் தேவை.
பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவு செய்யவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தமிழக போலீசார் சமர்பிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.