திருவண்ணாமலை: வயலில் கவிழ்ந்து பள்ளிப் பேருந்து விபத்து- உதவியாளர் உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை: வயலில் கவிழ்ந்து பள்ளிப் பேருந்து விபத்து- உதவியாளர் உயிரிழப்பு
விபத்து
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளிப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலையில் இன்று (சனிக்கிழமை) காலை வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் இருந்த விவசாய வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

உதவியாளர் உயிரிழப்பு - மாணவர்கள் மீட்பு

விபத்து நடந்தவுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் ‘ஐயோ! அம்மா’ என்று கத்திக் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் எந்தவித காயங்களுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் பேருந்தின் உதவியாளராகப் பணியாற்றி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த உதவியாளரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் பெயர் மற்றும் முழு விவரங்களை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com