

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி சிவஞானம் (ஐஏஎஸ்) கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குனர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (ஐஏஎஸ்) இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் இருவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் இணைந்து செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.