

சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்படுமா ? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மே 3 ஆம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் மே 2 ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது. ஏற்கனவே, நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.