தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். #ThoothukudiShooting
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை
Published on

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com