

புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்தநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
இரவு 8 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் எம்.பி.க் களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற அவர் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அவருடன் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் அங்கேயே தங்கினர். இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். அப்போது அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செல்கிறார். இந்த சந்திப்பின்போது, மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி சபையின் ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்கிறார்.
மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். அதேபோல், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். அதன்பிறகு, தமிழ்நாடு இல்லம் திரும்பும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது, பிரதமரை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்கிறார். சற்றுநேரம் அங்கு ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, பிறகு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
பிரதமர் மோடி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு அரசு ரீதியிலானது என்றாலும், அதன் பின்னணியில் அரசியல் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. இப்போதே கூட்டணி கணக்கை தொடங்கிவிட்டது. எனவே, தமிழகத்தில் பா.ஜ.க. - அ.தி. மு.க. கூட்டணி மலர்வது குறித்தும் இன்றைய சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.