சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
மு.க.ஸ்டாலின்- வி.எஸ்.பாபு
மு.க.ஸ்டாலின்- வி.எஸ்.பாபு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நேரம் செல்லச்செல்ல தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆளுங்கட்சியான திமுக பல தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தது. முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பின்தங்கினர்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை பெற்றார். கட்சியின் தலைவரே பின்னடைவை சந்தித்தது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

பிற்பகலில் வெற்றி நிலவரங்கள் படிப்படியாக வெளியாகத் தொடங்கின. கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று சாதனை படைத்த மு.க.ஸ்டாலின், இந்த முறை தோல்வியை சந்தித்தார். கொளத்தூரில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மு.க.ஸ்டாலின் அரசியல் பயணம்

1968-ம் ஆண்டு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. இளைஞரணியை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞரணி செயலாளராக இருந்த அவர், 1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றார். 2006-2011 வரை உள்ளாட்சி துறை அமைச்சராகவும், அதில், 2009-ம் ஆண்டு முதல் துணை முதல்-அமைச்சராகவும் இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

தேர்தல் வரலாறு

1984 - ஆயிரம் விளக்கு - தோல்வி

1989 - ஆயிரம் விளக்கு - வெற்றி

1991- ஆயிரம் விளக்கு - தோல்வி

1996- ஆயிரம் விளக்கு - வெற்றி

2011 - கொளத்தூர் - வெற்றி

2016- கொளத்தூர் - வெற்றி

2021- கொளத்தூர் - வெற்றி

2026- கொளத்தூர் - தோல்வி

X

Daily Thanthi
www.dailythanthi.com