இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர் தப்பி வந்த மீனவர் பேட்டி
ராமேசுவரம்,
கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் மீனவர் சரண் என்பவர் படுகாயம் அடைந்தார். மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி ராமேசுவரம் பகுதி மீனவர்களுக்கு நேற்று இரவு தெரியவந்தது. அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் உயிர்தப்பி வந்த மீனவர் கிளிண்டன் என்பவர் கூறியதாவது:- நாங்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து மீனவர் பிரிஜ்ஜோ இறந்துபோனார். மற்றொரு மீனவர் ஜெரோன் படுகாயம் அடைந்தார். நாங்கள் உயிருக்கு பயந்து கடலில் வீசப்பட்டு இருந்த வலைகளையும், பொருட்களையும் எடுக்காமல் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினோம். இலங்கை கடற்படையினர் வெறித்தனமாக எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் சங்க தலைவர் சேசுராஜ் கூறியதாவது:- இலங்கை கடற்படையினர் இதுவரை தமிழக மீனவர்களை தாக்கியும், படகுகளை சிறைபிடித்தும், கைது செய்து வந்தனர். இப்போது அவர்கள் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தி மீனவரை கொன்றுள்ளனர். விலங்குகளை கொன்றால் நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு மீனவர்களை கொல்லும் இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்திய - மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லை என்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் சங்க தலைவர் எமரீட் கூறியதாவது:- இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியும், விரட்டியும் வந்தனர். இப்போது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதனை மீனவர் சங்கத்தினர் கடுமையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூட்டில் இறந்துபோன மீனவர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மீனவர்களின் உயிர் காக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

