இலங்கை கடற்படை மிருகத்தனமாக துப்பாக்கி சூடு ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமேசுவரம் மீனவர் உயிர் இழந்தார். மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
இலங்கை கடற்படை மிருகத்தனமாக துப்பாக்கி சூடு ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு
Published on

ராமேசுவரம்,

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிஜ்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்.

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அலறித்துடித்தனர். பலியான மீனவர் உடலுடன் அவர்கள் கரைக்குப்புறப்பட்டனர். தகவல் அறிந்ததும், கரையில் உள்ள மீனவர்கள் பதற்றத்துடன் கடற்கரையில் வந்து குவிந்தனர். இதனால் ராமேசுவரம் கடற்கரை பரபரப்பாக காணப்பட்டது.

துப்பாக்கிச்சூடு குறித்து கிளிண்டன் என்ற மீனவர் கூறுகையில், நாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டி அடித்தனர். நாங்கள் அங்கிருந்து அவசரம், அவசரமாக செல்ல முற்பட்டபோது, எங்கள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றார். இலங்கை கடற்படை சுட்டுக்கொன்ற மீனவர் பிரிட்சோவின் உடலுக்கு ராமேஸ்வரம் மருத்துவமனையில் 4 பேர் கொண்ட மருத்துவகுழு பிரேத பரிசோதனையை தொடங்கியது.

ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ராமேசுவரம் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மீனவ அமைப்புகள் தரப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com