ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய கவர்னர் ஆர்.என்.ரவி

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேறியது.

அதன்பிறகு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது.

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கோர்ட்டு கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு செய்து வந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் 2-வது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை மாநில அரசு தடை/கட்டுப்பாடு விதிப்பதில் தொடர்ந்து சிக்கலும், கால தாமதமும் ஏற்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com