கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில், திமுக அரசு அமைந்தவுடன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பதாகவும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாகவும் அறிவித்து இருந்தனர். ஆனால் விலை குறைப்பு நடைபெறவில்லை. இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர். சிமெண்ட், கம்பி, ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே உள்ளது. அதிமுக ஆட்சியில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் கொடுக்கப்பட்டது. இதனை கூடுதலாக வழங்கிட வேண்டும்.

பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. தடுப்பூசி மையங்களில் போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தாமல் செல்லும் நிலை உருவாகிறது. தடுப்பூசிகளை அதிக அளவில் பெறுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்ததால் தான் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்மந்தம் இல்லை. நாள்தோறும் நூறு பேரிடம் மட்டுமல்ல, ஆயிரம் பேரிடம் பேசினால் கூட கவலையில்லை. எங்களுக்கு ஒன்றறை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com