தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவு; அமைச்சர் தங்கமணி விளக்கம்

தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவு என அமைச்சர் தங்கமணி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவு; அமைச்சர் தங்கமணி விளக்கம்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மின் கட்டணம் வசூல் தொடர்பாக காணொலிக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.

மின்கட்டணம் செலுத்துவதற்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30ந்தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். ஜூலை 30ந்தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?

மின் கட்டண கணக்கீடு எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள். எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா? ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், அரசாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகி இருக்கும் என்று சொல்கிறார்கள். வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராத தொகையா இது?, இல்லையென்றால், தண்டனையா?, வீட்டில் இருந்தது தவறா?

மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதை பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தவறான அடிப்படையில் மின்சார கணக்கீடு எடுத்திருக்கிறார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

இப்போது அரசாங்கம் விதித்த கட்டணம் நியாயமான கட்டணம் அல்ல; அநியாயமான கட்டணம்.

கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் கட்டண சலுகை கொடுத்து இருக்கிறார்கள். இந்த மாநில அரசுகளால் முடிகிறது; தமிழக அரசால் ஏன் முடியவில்லை?. மக்கள் தங்களை தாங்களே நொந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் குரலை கோட்டைக்கு சொல்வதற்காகத்தான் வரும் 21ந்தேதி (நாளை) கருப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்ப போகிறோம்.

நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முககவசங்களுடன் முழக்கங்களை எழுப்புவோம் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தங்கமணி கூறும்பொழுது, தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது. அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா?

நீதிமன்றமே ஏற்று கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை ஸ்டாலின் குளறுபடி என்கிறார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். இதுபோன்ற முரண்பட்ட கருத்துக்கள் தி.மு.க.வின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com