டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - 2 பேர் கைது

டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) செயலாளர் நந்தகுமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் உதவி கமிஷனர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஞானசேகர் (வயது 41), புளியந்தோப்பை சேர்ந்த நாகேந்திரராவ் (51) ஆகியோர்தான் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில் அவர்கள் 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டி.என்.பி.எஸ்.சி. பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான பணி நியமன ஆணை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராமாபுரத்தை சேர்ந்த பத்மாவதி, செம்பியத்தை சேர்ந்த சாஹீரா ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கியதாக கைதான 2 பேர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஏராளமான பேரிடம் அவர்கள் இருவரும் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com