தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதானத் தேர்வு தொடங்கியது

மின்னணு பொருட்கள் எதையும் எடுத்து செல்ல கூடாது என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதானத் தேர்வு தொடங்கியது
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு தேவையான ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அந்தவகையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு(2025) ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடந்தது. இதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்- 2 ஏ பதவிகளில் 9,457 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து முதல்நிலைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்தேர்வு தமிழகம் முழுவதும் பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செய்திருந்தது. தமிழகம் முழுவதும் இத்தேர்வு 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதாவது காலையில் பாடத்தேர்வும், மதியம் தமிழ் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 47 தேர்வுமையங்களில் தேர்வு நடைபெற இருந்நதது. சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் உள்ள 7 தேர்வுக்கூடங்களில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கல்லூரிக்கு 600-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுடன் வந்தனர். அதேநேரத்தில் பல தேர்வர்களுக்கு தேர்வுமையம் வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிட்டிருந்தும், அதில் உள்ள பதிவெண் அந்த மையத்தில் இல்லாமல் இருந்தது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கிருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது தேர்வுமையம் ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டது தெரிந்தது. அங்கிருந்த தேர்வர்களுக்கு நந்தனம் கல்லூரி, மாநில அரசு கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் தேர்வர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து 300-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேர்வர்களுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பின் தேர்வர்கள் சற்று சமாதானம் அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்திருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் பேசி, தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் மாநிலம் முழுவதும் 47 மையங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தொடங்கியது. மின்னணு பொருட்கள் எதையும் எடுத்து செல்ல கூடாது என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுகிறது. இதனையடுத்து 22-ந்தேதி குரூப்-2 பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com