

சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.என். பி.எஸ்.சி. தட்டச்சர் மாணிக்கவேல் (வயது 26), கூரியர் வேன் டிரைவர் வே.கல்யாணசுந்தரம் (31) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் மாணிக்கவேல் மதுராந்தகத்தையும், டிரைவர் கல்யாணசுந்தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் இவ்வழக்கில் கைது ஆனவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அந்த தேர்வு தொடர்பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்து இருக்கிறது.
குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் எழுந்ததற்கு, ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து வந்தது முக்கிய காரணமாக அமைந்தது.
அதே காரணம் தான் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகாரிலும் முன்வைக்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்து இருந்தனர்.
அவர்களில் ஒருவரான மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்தது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சுதாராணி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். விக்னேஷ் என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி சுதாராணி ஆவார்.