

சென்னை,
விழுப்புரத்தைச் சேர்ந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை ராமேசுவரம் மையத்தில் எழுதி தேர்ச்சி பெற்றனர். அவர்கள் இருவரும் தலா ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேடாக தேர்வில் தேர்ச்சி பெற்றது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று, குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக கைதான செம்பியம் சார்-பதிவாளர் அலுவலக உதவியாளர் வடிவு என்பவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், பெண் அலுவலர் வடிவு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.