டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கேட்கும் மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும் - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கேட்கும் மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும் - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட பலரை கைது செய்தனர்.

தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய குரூப்-2ஏ, குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. இதில் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், அழியும் மையை பயன்படுத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியுள்ளனர். இதன்மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க போலீசார் முயற்சிப்பது தெரிகிறது.

டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளன. அரசு உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக கைதான ஒருவர் தரப்பு வக்கீல் கூறியுள்ளார். இதன்மூலம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது வெறும் கண் துடைப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ., டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com