மதுராந்தகத்தில் பஸ் கண்டக்டர் அடித்துக்கொலை

டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த பயணி அடித்ததில் பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.
மதுராந்தகத்தில் பஸ் கண்டக்டர் அடித்துக்கொலை
Published on

தகராறு

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் நேற்று அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவராக விழுப்புரம் டெப்போவை சேர்ந்த குணசேகரனும், கண்டக்டராக பெருமாள் (வயது 56) என்பவரும் இருந்தனர். பெருமாள் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்.

3.30 மணியளவில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணி ஒருவர் பஸ்சில் ஏறி உள்ளார். அவரிடம் பஸ் கண்டக்டர் பெருமாள் டிக்கெட் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அந்த பயணி மது குடித்திருந்ததாக தெரிகிறது. டிக்கெட் எடுக்க முடியாது என்று அந்த பயணி கண்டக்டர் பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கண்டக்டர் பெருமாளுக்கும் பயணிக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு பெருமாளை அந்த பயணி அடித்துள்ளார். பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் மது போதையில் இருந்த பயணியை மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோவில் என்ற இடத்தில் இறக்கி விட்டனர்.

கொலை

மேல்மருவத்தூர் நோக்கி அந்த பஸ் சென்றபோது கண்டக்டர் பெருமாள் மயக்கம் அடைந்து பஸ்சில் சரிந்து விழுந்தார். உடனடியாக அந்த பஸ் மேல்மருவத்தூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கண்டக்டர் பெருமாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளை டிரைவர் குணசேகரன் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைத்தார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

டிக்கெட் எடுக்காமல் தகராறில் ஈடுபட்டு கண்டக்டரை அடித்தவர் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நிதி உதவி

பயணி தாக்கி கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்து போன கண்டக்டர் பெருமாளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கண்டக்டர் பெருமாளின் உடலுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இறந்துபோன கண்டக்டரின் மனைவி மீனாட்சியிடம் வழங்கினார். பின்னர் பெருமாளின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தமேடு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com