

சென்னை,
ரேஷன் அரிசி கடத்தியதாக வேலூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து அவரது மனைவி சவுஜன்யா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர், கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தியதாக எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்?, எத்தனை பேர் இந்த சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்?, அதற்கு என்ன காரணம்? என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதன்படி, தமிழக போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு 87 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 18 பேரை குண்டர் தடுப்புச் சட்ட அறிவுரை கழகமும், 67 பேரை ஐகோர்ட்டும் விடுவித்துவிட்டன. 2 பேர் மீதான குண்டர் சட்டம் மட்டுமே உறுதி செய்யப்பட்டு, சிறையில் அவர்கள் உள்ளனர்.
நடப்பாண்டில், இதுவரை 53 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதில், 10 பேரை அறிவுரைக் கழகமும், 42 பேரை ஐகோர்ட்டும் விடுவித்துவிட்டன. எஞ்சிய ஒருவர் மட்டுமே தற்போது சிறையில் உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், சின்ன சின்ன காரணங்களுக்காக, அந்த கைது உத்தரவு ஐகோர்ட்டு மற்றும் அறிவுரை கழகத்தினால் ரத்து செய்யப்பட்டுவிடுகிறது என்று கூறினார்.