அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என கூறப்பட்டு உள்ளது.
அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் பெரம்பூரை சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், காஞ்சீபுரத்தில் உள்ள அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வெளியே எடுக்க வேண்டும்.

48 நாள்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என எந்தவொரு ஆகம விதிகளும் இல்லை. கடந்த 1703-ஆம் ஆண்டு அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்யும்போதுதான் கோவிலில் உள்ள கல்வெட்டின் அடிப்படையில் அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

அதன் பின்னர், 1937-ஆம் ஆண்டு சிலை மீண்டும் எடுக்கப்பட்டது. அந்த ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சி, கோவில் தேவாஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், அனந்தசரஸ் குளத்தை 45 ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. அதனால் அத்திவரதர் சிலையை வெளியே எடுத்து பொதுதரிசனத்துக்கு வைப்போம். பொதுமக்கள் தரும் காணிக்கையைக் கொண்டு புனித குளத்தை சுத்தம் செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சிலை வெளியே எடுக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1979-ஆம் ஆண்டு அதாவது 42 ஆண்டுகளுக்குப் பின்னர், அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டு 40 நாள்கள் பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 8 நாள்கள் தரிசனம் செய்யப்பட்டது. இதன்மூலம் அத்திவரதர் சிலையை வெளியே எடுப்பது, பொதுமக்களின் தரிசனத்துக்காக வெளியில் வைப்பது என்பது தொடர்பாக கடுமையான ஆகம விதிகள் எதுவும் இல்லை. எனவே பொதுமக்களின் விருப்பத்தின்படி தரிசனம் செய்யும் நாள்களை 48 நாள்கள் என்று இல்லாமல் நீட்டிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அத்திவரதர் சிலையை மேலும் சில நாள்கள் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் வெளியில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதே போல் வி.கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மனீக்குமார் , சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்ற அரசின் வாதத்தை தொடர்ந்து அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com