

சென்னை
பருவமழை பொய்க்கும் காலங்களில் மழைநீர் சேமிப்பு அவசியம் என்பதால் தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அந்த நிறுவனத்தில் நடைபெறும் வளங்குன்றா வளர்ச்சி, பருவநிலை மீட்சிக்கான கருத்தரங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது. நிறுவனத்தின் 30 ஆண்டு கால ஆராய்ச்சி புத்தகத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், வேளாண் தொழில் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு எம்.எஸ் சுவாமிநாதனின் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது.
இதை அடுத்து எம்.எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டறிக்கை மற்றும் கொள்கை அறிக்கை மலரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
சுவாமிநாதனை உலகம் போற்றும் விவசாய விஞ்ஞானி. நீர்மேலாண்மை திட்டம் மூலம் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இரண்டாம் பசுமை புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட தீவிரமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.கடந்த 8 ஆண்டுகளில், 6-வது முறையாக தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
அதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.