ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள்

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள்
Published on

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற ஆதாருடன், செல்போன் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதி கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

2.10 லட்சம் ஏக்கரில் சாகுபடி

முடிவில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் குறுவை பருவத்தில் 60 ஆயிரம் எக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேரிலும், கோடை சாகுபடி 9 ஆயிரத்து 500 எக்டேரிலும் ஆக மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் எக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் குறுவை சாகுபடி 61 ஆயிரத்து 588 எக்டேரிலும், சம்பா சாகுபடி 85 ஆயிரத்து 887 எக்டேரிலும், தாளடி சாகுபடி 53 ஆயிரத்து 450 எக்டேரில் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு காரீப் பருவத்தில் 131 எக்டேரில் நிலக்கடலையும், 174 எக்டேரில் எள் சாகுபடியும், 6 எக்டேரில் பருத்தி, 81 எக்டேரில் கரும்பு சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

30-ந்தேதி கடைசி நாள்

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000-ம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தினபடி, பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விவரங்களை மத்திய அரசின் பிரதம மந்திரி கிஷான் இணைய வாயிலாக விவசாயிகள் நேரடியாக ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் வருகிற 30-ந்தேதிக்குள் (புதன்கிழமை) ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com