

டாக்டர் ராமதாஸ் பேச்சு
பா.ம.க. வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் காணொலி மூலம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
பா.ம.க. சார்பில் 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு அறிக்கையில் வேளாண் கல்வி, வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். வேளாண் துறைக்கு ரூ.47 ஆயிரத்து 750 கோடி நிதி ஒதுக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 358.85 கோடி நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களுடைய நிழல் அறிக்கையை கவனமாக பரிசீலித்து, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி ராமதாஸ்
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 100 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஆட்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கையை பா.ம.க. தயாரித்துள்ளது. எங்களது அறிக்கையை
முதல்-அமைச்சரிடம் கட்சி தலைவர் ஜி.கே. மணி வழங்குவார் என்றார்.
பின்னர் சென்னையில்பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள்
* காய்கறி, பழங்கள், பூக்கள் வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
* விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரமாண்டக் கிடங்குகள் அமைக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
* தஞ்சை, வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
நீரா பானம் விற்பனை
* வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் அடையாள உதவியாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படாது.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க...
* தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும். அதேபோல வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
* நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மணல் குவாரிகள் மூடல்
* அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். கட்டுமான பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கஎம் சாண்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
* சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும். நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்க தடை விதிக்கப்படும். பனைமரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும்.
* வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
* ஒவ்வொரு மாநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்து
கொடுக்கப்படும்.