பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்
Published on

தடையில்லா சான்று

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் பொது அமைதி, பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதலை முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முறையே கோட்டாட்சியர், துணை கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், சிலை நிறுவும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

ஒலி பெருக்கி

ஒலி பெருக்கி பயன்படுத்தும் உரிமமானது, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒலி பெருக்கியை பயன்படுத்தும் போது, ஒலியின் அளவு பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் அளவு வரம்பை மிகாமல் பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பாளர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சிலையை அமைக்க வேண்டும். மின்சாரம் வழங்கும் ஆதாரத்தை குறிக்கும் கடிதம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்டதற்கான ஆதாரம் பெற வேண்டும். சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது.

பட்டாசு வெடிக்க தடை

விநாயகர் சிலை இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. சிலை அருகில் அரசியல் கட்சி தலைவர்கள், சாதி தலைவர்கள் டிஜிட்டல் பேனர்களை வைக்கக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது, அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com