உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் தனியார் கல்லூரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 2018-19 கல்வியாண்டில் தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் வெளிமாநில மாணவர்களை சேர்க்கமாட்டோம். வெளிமாநிலங்களில் கல்வி மையங்களை திறக்க மாட்டோம் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவாதத்தை மீறி, வெளிமாநில மாணவர்களை சேர்த்து கொள்ளவும், கல்வி மையங்களை திறப்பதற்கும் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் தீர்மானம் இயற்றப்பட்டன. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.வனிதா, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

உத்தரவாதம் மீறல்

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஐகோர்ட்டுக்கு கடந்த ஆண்டு அளித்த உத்தரவாதத்தை மீறி செயல்பட்டதால், சிண்டிகேட் குழுவில் இடம் பெற்றுள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஆர்.சாருமதி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். இவர்களும், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோரும் ஜனவரி 7-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

மங்கத்ராம் சர்மா

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை தவிர அனைவரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் நர்மதா சம்பத், செயலாளர் மங்கத்ராம் சர்மா வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறினார். செயலாளரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தீவிரமான வழக்கு

உயர்கல்வித்துறை செயலாளரை நேரில் ஆஜராக குறுகியகால இடைவெளியில் இந்த ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு டிசம்பர் 5-ந் தேதிக்கு அவருக்கு வழங்கப்பட்டு விட்டது.

ஒரு மாதத்துக்கு முன்பே உத்தரவு கையில் கிடைத்திருக்கும்போது, அவர் நேரில் ஆஜராகி இருக்க வேண்டும். கோர்ட்டு அவமதிப்பு வழக்கு என்பது மிகவும் தீவிரமானது. இதை சாதாரண வழக்காக கருத முடியாது. அவர் வேண்டுமென்றே நேரில் ஆஜராகாமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக உள்ளது.

கைது செய்ய வேண்டும்

எனவே, உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும். இந்த வாரண்டின் அடிப்படையில், மங்கத்ராம் சர்மாவை, சென்னை போலீஸ் கமிஷனர் கைது செய்து, நாளை (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com