மாநில நிதி உரிமையை காப்பாற்ற தி.மு.க. எம்.பி.க்கள் எப்போதும் முன் வருவார்கள் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு, மு.க.ஸ்டாலின் பதில்

நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து மாநிலத்தை அதோகதி நிலையில் நிறுத்தி இருப்பது அ.தி.மு.க. அரசு தான் என்றும் மாநில நிதி உரிமையைக் காப்பாற்ற தி.மு.க. எம்.பி.க்கள் எப்போதும் முன்வருவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மாநில நிதி உரிமையை காப்பாற்ற தி.மு.க. எம்.பி.க்கள் எப்போதும் முன் வருவார்கள் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு, மு.க.ஸ்டாலின் பதில்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பா.ஜ.க. மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும், 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை கெட்டியான திரைபோட்டு மறைப்பதற்காக, என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது. முதல்-அமைச்சரின் முயற்சியால்தான் தமிழ்நாட்டிற்கு 32,849 கோடி ரூபாய் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று, மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், 14.2.2020 அன்று 2020-21-ம் ஆண்டிற்காக, தான் படித்த நிதிநிலை அறிக்கையையே மறந்துவிட்டாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலிடுகிறது.

உரிய நிதிப் பகிர்வைப் பெற்று விட்டது தமிழகம் என்றால், 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில், சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் 25-வது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியது ஏன்?

முதல்-அமைச்சர் முயற்சியால் 2020-21-ம் ஆண்டிற்கு ரூ.4,025 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டு, முதல் தவணை பெறப்பட்டுள்ளது என்று இப்போது தன்னிச்சையாக, யாரும் கேட்காமலே வக்காலத்து வாங்கும் நிதி அமைச்சர், அதே நிதிநிலை அறிக்கையில், பா.ஜ.க. அரசைக் குற்றம் சாட்டியது ஏன்?.

14 மாநிலங்களுக்கும் ஒதுக்கிடப் பரிந்துரைத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை, மத்திய அரசே இன்னும் முழுமையாக ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி விட்டு, இப்போது, முதன்முதலில் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றோம். முதல் தவணையையும் பெற்று விட்டோம் என்று, சிறிதும் நாணமின்றிப் பின் வாங்குவது ஏன்?.

2019-20-க்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறியது யார்? அந்த வரலாறு காணாத வீழ்ச்சி 15-வது நிதிக்குழுவில் சரி செய்யப்பட்டு விட்டதா?. மத்திய அரசின் 7,586.07 கோடி குறைக்கப்பட்ட வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது எனவும்; அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியது யார்?.

இப்போது முதல்-அமைச்சரின் முயற்சியால் நிதி பகிர்வு அதிகம் கிடைத்தது என்று அரண் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது?. நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் நிர்ப்பந்தமா, அல்லது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையா?.

15-வது நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன? அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை? நிதிக்குழுவிடம் நேரில் முன் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? அதில் ஒப்புக்கொள்ளப்பட்டவை எத்தனை? அவற்றைத் தமிழக மக்களுக்கு வெளியிடத் தயாரா?

1971 மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்கிறீர்களே, அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா?.

நிதிக்குழுவிற்கு ஆய்வு வரம்புகள் வெளியிட்ட போதே, அதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதி பா.ஜ.க. ஆளாத பத்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதி ஆதரவு திரட்டியது தி.மு.க. மட்டுமே.

அப்போது முதல்-அமைச்சர், நிதி அமைச்சர், 50 அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் என்பதுதான் என் கேள்வி.

நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து மாநிலத்தை அதோகதி நிலையில் நிறுத்தி இருப்பது அ.தி.மு.க. அரசு தான். மாநில நிதி உரிமையைக் காப்பாற்ற தி.மு.க. எம்.பி.க்கள் எப்போதும் முன்வருவார்கள் என்ற ஆக்கபூர்வமான அரசியலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நிதி அமைச்சர் தவியாய்த் தவிக்கலாம்.

கொரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம்,

தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்; இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பா.ஜ.க.வின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com