சில்லறை- மொத்த வணிகர்களுக்கு, அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு தீர்மானம்

சில்லறை, மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
சில்லறை- மொத்த வணிகர்களுக்கு, அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும்; அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு தீர்மானம்
Published on

சில்லறை, மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணையில்லா கடன் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

பிணையில்லா கடன்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் அதிபர் கே.கே.பாலுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும். தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12 சதவீத வட்டியை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவன செய்ய வேண்டும்.

சட்ட திருத்தம்

தற்போது, ஜி.எஸ்.டி. செலுத்தும்போது செலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, முகவர்கள் கையெழுத்திட்டாலே வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்கத்தின் நிறுவன தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவநேசன், ஜெகதீசன், தேவராஜா, முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கவுரவிக்கப்பட்டனர். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் இணைச்செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com