மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க சூரிய ஒளி மின்சக்தியை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க சூரிய ஒளி மின்சக்தியை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Published on

பொதுக்குழு கூட்டம்

பா.ம.க. சார்பில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் விளங்கி வரும் நிலையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மாவட்டத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமாக இருந்தாலும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சிப்காட் அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

அதற்கு பதில் அரசு புறம்போக்கு நிலங்களில் சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூரிய ஒளி மின்சக்தி

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி சட்டமாக இயற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது மற்றும் பா.ம.க.வின் கோரிக்கையாக உள்ளது. யூரியா பற்றாக்குறையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில் தற்போது தி.மு.க. ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அக்னி குண்டம்

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ம.க. அந்த இடத்தில் அக்னி குண்டத்தை அமைக்கும். விளைநிலங்களை பாதிக்காத அளவு 8 வழி சாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com