

சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் வருங்கால கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் சேர காத்துகொண்டு இருக்கின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
ஒப்புதல் கிடைத்த பிறகு தான் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும், மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
எனவே கவர்னர், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், சாதாரண அடித்தட்டு மக்களின் கனவுகள் நனவாகும் விதமாக இந்த சட்ட மசோதாவுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே இந்த சலுகை கிடைக்கும் வகையில், எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.