மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பும் பணி தீவிரம்: தமிழகத்துக்கு மேலும் 4.26 லட்சம் தடுப்பூசிகள் வந்தது

தமிழகத்துக்கு மேலும் 4.26 லட்சம் தடுப்பூசிகள் வந்தது. அந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பும் பணி நடந்தது.
மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பும் பணி தீவிரம்: தமிழகத்துக்கு மேலும் 4.26 லட்சம் தடுப்பூசிகள் வந்தது
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு காலதாமதமின்றி விரைந்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் 42 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் என கூறப்பட்டது.

அதன்படி இதுவரை 1 கோடியே 6 லட்சம் அளவுக்கு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்தநிலையில் மத்திய தொகுப்பில் இருந்து நேற்று முன்தினம் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. அதேபோல் ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை 1.26 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன.

தொடர்ந்து மாலையில் புனேவில் இருந்து மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அதன்படி நேற்று ஒரே நாளில் 4.26 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தில் இருந்து சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு நேற்று மாலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை பிரித்து அனுப்பும் பணியை துரிதப்படுத்தினர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 7.91 லட்சம் தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளன. இதுதவிர 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு மாநில அரசின் நேரடி கொள்முதலில் இருந்து 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதனால் ஓரிரு வாரத்துக்குள் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com