சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை? தாய் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு

சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்டாளா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அவளது தாய் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை? தாய் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு
Published on

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், 10 வயதுடைய எனது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய வீட்டில் வேலை பார்த்து வருகிறாள்.

இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் அவர் பேத்தியை என்னிடம் காண்பிக்க மறுத்து வருகிறார். எனவே அவரை அழைத்து விசாரிக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.

மேலும் இதுகுறித்து சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.

இதற்கிடையே அந்த சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் சிறுமியின் தாய் பேசும்போது, என்னுடைய குழந்தையும், நானும் நன்றாக இருக்க வேண்டும், இதற்காக தொழில் அதிபர் ரூ.10 லட்சம் கொடுத்தார். இந்த பணத்தை வாங்கி நான் வங்கியில் போட்டு உள்ளேன். ஒரு வீட்டை கட்டிவிட்டு அங்கு சென்று விடுவேன். என்னுடைய குழந்தையை நான் கூட பார்க்க முடியாது, என கூறுகிறார். அதற்கு அந்த உறவுக்கார பெண் கூறுகையில், உனக்கு மனசாட்சியே இல்லையா?, இவ்வளவு சீப்பா நடந்துள்ளாயே, உன்னிடம் பேசுவதே வேஸ்ட், எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

சிறுமியை ரூ.10 லட்சத்துக்கு விற்றதுபோல் பேசிய இந்த ஆடியோ குறித்து சேலம் டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பே அந்த சிறுமி மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் சிறுமியின் தாய், அவருடைய உறவுக்கார பெண்ணிடம் குழந்தையை ரூ.10 லட்சத்துக்கு விற்றதுபோல் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com