வாட்ஸ் அப்பில் வீடியோ பரவியதால் சிக்கினார்: வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் சிக்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வாட்ஸ் அப்பில் வீடியோ பரவியதால் சிக்கினார்: வாகன ஓட்டியிடம் பணம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் இருளாண்டி. இவர் அப்பகுதியில் உள்ள கரூர் மாவட்ட எல்லையில் உள்ள குருகத்தி என்ற இடத்தில் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியை தடுத்து நிறுத்தி பணம் வாங்குவது போல ஒரு வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி பணம் வசூல் செய்வது போல காட்சி உள்ளது. மேலும் அந்த நபரிடம் கூடுதல் பணம் கேட்பது போலவும், சப்-இன்ஸ்பெக்டர் இருந்திருந்தால் கணக்கு வேறு மாதிரி செய்து இருப்பார் என்றும் இருளாண்டி கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த தகவல் காவல் துறை உயர்அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இருளாண்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக போலீஸ்காரர் இருளாண்டியை பணியிடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com