தேசிய மருத்துவ மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தேசிய மருத்துவ மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தேசிய மருத்துவ மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனை தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த டாக்டர்களுக்கும், இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று பயன் அடைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய மருத்துவ மசோதாவை அறிமுகப்படுத்தியபோதே நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து நிலைக்குழுவில் அந்த மசோதா குறித்து நமது தரப்பு வாதத்தை கேட்டனர்.

இதில் நமது கோரிக்கைகளை கூறினோம். அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நிலைக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் நெஸ்ட் மற்றும் பிரிட்ஜ் படிப்புக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.

தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து டாக்டர்கள் நாளை(இன்று) போராட்டம் நடத்துகிறார்கள். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் கவனித்து கொள்ளும். மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் தேசிய அளவில் 147 இடங்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கான கலந்தாய்வு இன்னும் 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி, கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com