மணல் திருடுபவர்களிடம் வசூலிக்கும் அபராதத்தை நீர்நிலை மேம்பாட்டுக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி நூதன தண்டனை வழங்கினார்.
மணல் திருடுபவர்களிடம் வசூலிக்கும் அபராதத்தை நீர்நிலை மேம்பாட்டுக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு யூனிட் மணலுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி நூதன தண்டனை வழங்கினார். இந்த தொகையை செலுத்தினால் தான், வழக்கில் சிக்கியவருக்கு ஜாமீன் அல்லது முன்ஜாமீன் கிடைக்கும். இந்த தொகை எதற்காக பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து வருகிறார். அவர் முன்பு கடந்த 6 மாதங்களில் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவர அறிக்கையை அரசு குற்றவியல் வக்கீல் பிரபாவதி தாக்கல் செய்தார்.

இவற்றை படித்து பார்த்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மணல் திருட்டில் சிக்கியவர்களிடம் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. மணல் திருட்டினால், நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த அபராத தொகையை நீர்நிலை மேம்பாட்டுக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது? ஏரி, குளம் உள்ளிட்டவைகளை தூர்வார ஏன் செலவு செய்யக்கூடாது? என்று சரமாரியாக கேள்வி கேட்டார். பின்னர், இதுகுறித்து விரிவான உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com