ஆட்சியை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்வதே தி.மு.க.வின் வேலையாக உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மக்களுக்கு நல்லது செய்வதைவிட, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்வதே தி.மு.க.வின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆட்சியை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்வதே தி.மு.க.வின் வேலையாக உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீணான வதந்தி பரவியிருக்கிறது. வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்டு இருக்கிறார்கள். அவர் யாகம் நடத்தியதை யார் பார்த்தது? ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இதுபோன்ற வதந்திகளுக்கு எப்படி நான் கருத்து தெரிவிக்க முடியும். அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும், ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் எதிரிக்கு எதிரி நண்பனாக இருக்கக்கூடிய டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வும் சேர்ந்து செய்கிற சதி தான் இது. அவர்களால் எங்கள் ஒற்றுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு கலைந்துவிடும், நாளை கலைந்துவிடும் என்று சொல்லி, சொல்லி அவர்கள் வாய் தான் ஓய்ந்துபோய் இருக்கிறது. கடல் அலை ஓய்ந்துவிடப் போவதில்லை, அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியும் மக்கள் மனதில் நின்று, இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசு இது தான்.

எனவே இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று பல்வேறு சூழ்ச்சிகளை செய்துவருகிறார்கள். மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்பதை சிந்திப்பதை விட்டுவிட்டு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி வலை பின்னுவதிலேயே தி.மு.க.வின் யோசனையும், செயலும் இருந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வை பா.ஜ.க. தலைமை அடிமையாக்க பார்க்கிறது என்று தம்பிதுரை கூறியிருக்கிறாரே?

பதில்:- தம்பிதுரை ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்துவருகிறார். கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அ.தி.மு.க. தனித்தன்மை படைத்த கட்சி என்பது அவருக்கு தெரியும். எந்த நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை அ.தி.மு.க. விட்டுக்கொடுக்காது. இது அவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான் அ.தி.மு.க. செயல்படுகிறது. நாங்கள் யாருக்கும் கூஜாவாகவோ, துதிபாடுவதாகவோ இல்லை, அது எங்கள் அகராதியிலேயே கிடையாது.

கேள்வி:- அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை இந்த குற்றச்சாட்டை அழுத்தமாகவே முன்வைக்கிறாரே?

பதில்:- அதைத்தான் நான் மறுத்துவிட்டேனே. பா.ஜ.க. அடிமையாக்க நினைக்கிறது என்று தான் சொல்லியிருக்கிறார், அடிமையாகிவிட்டோம் என்று அவர் சொல்லவில்லையே. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. பலம் இருக்கிறதா? இல்லையா? என்பது அந்தந்த கட்சிகளுக்கு தெரியும். எங்களை பொறுத்தவரையில் நாங்கள் பலம் வாய்ந்தவர்கள். எங்களைவிட பலசாலிகள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com