ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் ஏட்டு ஜெயகாந்தன் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் கடையின் உரிமையாளர் பீர் முஹம்மது (வயது 37) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3 கிலோ 750 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பீர் முஹம்மது அளித்த தகவலின் அடிப்படையில், ஆறுமுகனேரி அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த பாலகணேஷ்(36) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான காவல்துறையினர் ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ புகையிலைப் பொருட்களுடன் வந்த பாலகணேஷை பிடித்து விசாரித்ததில், அவர் மற்றொரு இடத்தில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்த 33 மூட்டைகள் கண்டறியப்பட்டன. அவரிடமிருந்து மொத்தம் 34 மூட்டைகளில் இருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். இது தொடர்பாக திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் திலீபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பீர் முஹம்மது மற்றும் பாலகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com