

சென்னை
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தி.மு.க ஆட்சி காலத்தில் 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார்.
வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பில் உள்ள வாசகத்தில் பிழை உள்ளது, எனவே தனக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வைகோ கோரிக்கை வைத்தார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நான் ஒரு போதும் கோரவில்லை என்றார்.
வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. வைகோவின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்திவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபின் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.
நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன். நான் பேசியது தேசதுரோகம் அல்ல. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது.
நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன். எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன்.
ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை இவ்வாறு அவர் கூறினார்.