

சென்னை,
சென்னை, ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், நடைபெற்ற வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான தங்கும் வசதியும், உணவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அரசு அலுவலங்களுக்கு விடுமுறை
மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டத்தின் முடிவில், ஆவின், பொதுபோக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்தில் உள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அளித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தனியார் நிறுவனங்கள்
மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு, தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.