புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்களை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






