இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கி சூடுசம்பவத்தின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடுசம்பவத்தின் 3-வது ஆண்டு நினைவுநாளையொட்டி, தூத்துக்குடியில் 1,200 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 144 குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டப்படி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடுவதற்கோ அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 12 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 55 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ற புதிய பணி ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப்பதற்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com